இந்திய சினிமாவை சத்யஜித்ரேவிற்கு பிறகு உலக அரங்கில் கொண்டு சேர்த்தவர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மணிரத்னம். இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மணிரத்தினம் பல்லவி அனுபல்லவி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானார். தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் பகல் நிலவு. 

உலக நாயகன் கமலஹாசன் & இயக்குனர் மணிரத்தினம் இணைந்து உருவான நாயகன் திரைப்படம் இன்றும் உலகின் தலைசிறந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் இயக்குனராக இருக்கும் மணிரத்னம் இன்றும் டிரெண்டில் இருக்கிறார். மிகுந்த முற்போக்கு சிந்தனையாளரான இயக்குனர் மணிரத்தினம் , தன் சிந்தனைகளை  தனது படங்களிலும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். 

தமிழ் திரையுலகின் கனவு திரைப்படமாக பல ஆண்டுகளாக பலரால் முயற்சி செய்து கைவிடப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கையில் நிஜமாகியிருக்கிறது. விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது ஊரணியில் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பிறந்தநாள் காணும் மணிரத்தினம் அவர்களைப் பற்றிய ஒரு தகவல் அனைவரையும் குழப்பமடைய வைத்திருக்கிறது. 

ட்விட்டரில் இயக்குனர் மணிரத்னத்தின் பெயரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் பிறந்த நாளான இன்று ட்விட்டரில் இணைந்து உள்ளதாக பதிவும் போடப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும்  இயக்குனர் மணிரத்னம்  அவர்களை ட்விட்டரில் வரவேற்று வந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவியும் இயக்குனருமான நடிகை சுஹாஷினி இதனை மறுத்துள்ளார். 

மேலும் இயக்குனர்  மணிரத்னம் இதுவரை எந்த சமூக வலைதள பக்கங்களுக்கும் ஈடுபாடு காட்டியதில்லை எனவும் தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த ட்விட்டர் கணக்கு போலியானது என எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளார்.