தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருபுறம் சட்டமன்ற உறுப்பினராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் தனது  திரைப்பயணத்தையும் தொடர்ந்து வருகிறார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திலும், இயக்குனர் K.S.அதியமான் இயக்கத்தில் தயாராகும் ஏஞ்சல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் புதிய படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடித்துவரும் திரைப்படம் கண்ணை நம்பாதே.

லிப்பி சினி கிராப்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கண்ணை நம்பாதே திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து ஆத்மிகா கதாநாயகியாக நடிக்க, பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் மற்றும் சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் கண்ணை நம்பாதே படத்திற்கு பரியேரும் பெருமாள் ஒளிப்பதிவாளரான ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, சாம்.C.S. இசையமைக்கிறார்.

கண்ணை நம்பாதே திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது படப்பிடிப்பு குறித்த ருசிகர தகவல் வெளியானது. கண்ணை நம்பாதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சுபிக்ஷா தன் பகுதி காட்சிகளை முடித்து படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து கண்ணை நம்பாதே படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.