பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஷில்பா ஷெட்டி தமிழில் பிரபுதேவா இரட்டை வேடங்களில் நடித்த மிஸ்டர் ரோமியோ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் மற்றும் ஜோதிகா நடித்த குஷி திரைப்படத்தில் மெக்கரீனா என்னும் பாடலுக்கு நடனம் ஆடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் என இந்தியாவின் பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஷில்பா ஷெட்டி, பின்னர் கடந்த 2009ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ரா தம்பதிக்கு  ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச திரைப்படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். ராஜ் குந்த்ராவின் மீதான கைது நடவடிக்கைக்கு சாதகமாக நிறைய ஆதாரங்கள் இருப்பதால் தொடர்ந்து ராஜ் குந்த்ராவின் மீது விசாரணைகள் நடந்து வருகிறது.
 
இதனால் மிகவும் மனமுடைந்து இருந்த நடிகை ஷில்பா ஷெட்டி தற்போது கணவர் கைதுக்குப் பிறகு முதல் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப் பதிவில், 

இறந்தகாலத்தை கோபத்தோடு நினைத்து பார்க்காதீர்கள், எதிர்காலத்தை பயத்தோடு எதிர் கொள்ளாதீர்கள், ஆனால் உங்களை சுற்றி நடக்கும் விஷயங்களில் விழிப்புணர்வோடு இருங்கள்...

என ஆங்கிலத்தில் ஜேம்ஸ் தர்பர் கூறியதை மேற்கோள் காட்டி,

இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என்று ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன் கடந்த காலத்தில்  நிறைய தடைகளை கடந்து வந்திருக்கிறேன்... எதிர்காலத்தில் வரும் தடைகளையும் நல்லபடியாக கடந்து விடுவேன் என் வாழ்க்கையை இன்று நான் வாழ்வதில் இருந்து எதுவும் என்னை திசை திருப்ப முடியாது. 

என பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
actress shilpa shetty important statement after her husband arrest​​​​​​​