கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்திய திரையுலகில் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் ப்ரீத் சிங் அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். 

இது தொடர்பாக ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நான் நன்றாக இருக்கிறேன். நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருங்கள் என பதிவிட்டுள்ளார். ரகுல் ப்ரீத் சிங் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். 

தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்திற்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, NGK போன்ற படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பிற மொழிப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் போதைப் பொருள் வழக்கில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயர் அடிபட்டது. அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார். ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று விளக்கினார் ரகுல். 

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார் ரகுல். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ரகுல். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.