நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவி, பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர். சமீபத்தில் நடிகர் விஷால் கொரோனாவிலிருந்து விடுபட்டார். கருணாஸ் தனது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இரண்டு நாட்கள் முன் நடிகை நிக்கி கல்ராணி தனக்கு கொரோனா பாதிக்கப்பட்டது குறித்து பதிவு ஒன்றை செய்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகையும் அரசியல் பிரபலமுமான நவ்னீத் கவுருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கணவர் ரவி ராணா, எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதை தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார் நவ்னீத் கவுர். 

கடந்த சில நாட்களுக்கு முன் நவ்னீத்தின் மாமனாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது நவ்னீத் ராணாவின் மகன், மகள், சகோதரி, மாமியார் உள்பட குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நடிகை நவ்னீத் 

தற்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள நவ்னீத், தமிழில் விஜயகாந்த் நடித்த அரசாங்கம் படத்தில் நடித்தார். கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி திரைப்படம் இவரை மேலும் பிரபலமாக்கியது. நவ்னீத் கவுர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.