ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனிமி எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தற்போது சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கி வருகிறது. இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக மிருணாளினி நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு நாயகியாக நடிக்க பல்வேறு நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

தற்போது இந்த படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆர்யாவுக்கு ஜோடியாக இவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விஷாலுடன் சிவப்பதிகாரம் படத்தில் நடித்துவிட்டு, பின்பு முழுக்கவே மலையாளத்தில் தான் கவனம் செலுத்தி வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக சிகிச்சைகள் மேற்கொண்டு மீண்டு வந்துள்ளார். அவரின் துணிச்சலை மலையாளத் திரையுலகினர் மட்டுமல்லாது பிற மொழி திரைப் பிரபலங்களும் கூட எப்போதுமே பாராட்டி வந்தனர்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர், தமிழில் மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. எனிமி படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்க வெளிநாட்டுக்குப் பயணிக்கவுள்ளது படக்குழு.

கடைசியாக ஆர்யாவின் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சாங்கி சிறையில் இருக்கும் கைதியாக அதில் காட்சியளித்தார் ஆர்யா.