மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த பட்டம் போலே படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து தமிழ்,மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனனின் முதல் தமிழ் திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் நடித்தார். இதனை அடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் மாறன் படத்திலும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கும் புதிய பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இயக்குனர் ரவி உடையவர் இயக்கத்தில் தயாராகும் யுத்ரா படத்தில் ஃபர்ஹான் ஆக்தர் வசனங்களை எழுத ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைத்துள்ளார்.

ரித்திஷ் சித்வானி மற்றும் ஃபர்ஹான் அக்தரின் எக்ஸல் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாராகும் யுத்ரா திரைப்படத்தில் நடிகர் சித்தான்ட் சதுர்வேடி கதாநாயகனாக நடிக்க மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் யுத்ரா படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.