இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக உயர்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார். தற்போது மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

தொடர்ந்து தமிழில் அஜித் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வரும் கீர்த்தி, மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து வரும் சர்க்கார் வாரி பாட்டா படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

மேலும் ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் முதல் முறை நடிகராக களமிறங்கும் இயக்குனர் செல்வராகவன் உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் சில தினங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார்.

தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டு தேவையான அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் லேசான அறிகுறிகளோடு கோவிட் தொற்றுக்குள்ளான  நடிகை கீர்த்தி சுரேஷ் மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனையடுத்து தற்போது வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார் கீர்த்தி.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

“இந்த நாட்களில் நெகட்டிவ் வார்த்தையும் பாசிட்டிவ் அர்த்தங்களைக் கொடுக்கிறது. அனைவரது பிரார்த்தனைகளுக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி! அனைவரும் பொங்கல் மற்றும் சங்கராந்தியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்” 

என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.  எனவே விரைவில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலையிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை சரியாக பயன்படுத்துங்கள். கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள்.