இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலையை விட இரண்டாம் அலையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினசரி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து செல்லும் நிலையில் தினசரி உயிரிழப்போரின் எண்ணிக்கை 4500-ஐ தொட்டுவிட்டது.  

முக கவசம் பயன்படுத்தும் படியும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் படியும் மத்திய அரசு, மாநில அரசுகளும் மருத்துவர்களும் எத்தனையோ முறை அறிவுறுத்தினாலும் மக்களின் மத்தியில் இன்னும் அந்த விழிப்புணர்வு ஏற்பட்டதாக தெரியவில்லை. இன்னும் பலரும் சரியாக முக கவசம் அணியாமலும் தடுப்பூசி பற்றிய குழப்பத்தோடும் பயத்தோடும் இருப்பதை நாம் பார்க்கிறோம். 

இதனால் தமிழக  அரசின் சார்பில் பல முன்னணி திரைப்பிரபலங்கள் மக்களுக்கான விழிப்புணர்வு வீடியோக்களில் பேசி வருகிறார்கள். முன்னதாக முன்னணி  நடிகர்களான ஜெயம் ரவி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை கீர்த்தி சுரேஷ்  பேசிய விழிப்புணர்வு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த வீடியோவில்,

“நான் தடுப்பூசி எடுத்துக்கொண்டேன் கட்டாயம் நீங்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் முககவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் தேவையான இடங்களில் இரட்டை முககவசம் அணிவதை பின்பற்றுங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாக இருங்கள். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம்"

என மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தொடர்ந்து பல நடிகர் நடிகைகள் திரை பிரபலங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.