தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை ஜோதிகா. தமிழில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவின் வாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜோதிகா தொடர்ந்து குஷி, தெனாலி, டும் டும் டும், 12B என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.

சூர்யாவுடன் காக்க காக்க, தளபதி விஜய்யுடன் திருமலை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திரமுகி, கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகையாக உயர்ந்தார். மேலும் மொழி, 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி என கதாநாயகிகளை முன்னிறுத்தும் திரைப்படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த புதிய படத்தை இயக்குனர் இரா சரவணன் இயக்குகிறார்.

நடிகை ஜோதிகாவுடன் இணைந்து நடிகர்கள் சசிகுமார் மற்றும் சமுத்திரகனியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு தகவல் ஒன்று இசையமைப்பாளர் டி.இமான் பகிர்ந்துள்ளார். 

இந்த படத்தின் மூலம் பவித்ரா சாரி என்னும் புதிய பாடகரை அறிமுகப்படுத்துகிறார். இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதுகிறார். இதனை தெரிவிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விரைவில் இந்த பாடல் மற்றும் இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.