தமிழில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 2001-ம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதன் பிறகு வெளியான ரோஜாக் கூட்டம் திரைப்படம் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. 2005-ம் ஆண்டு சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் பூமிகாவின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியது. 

தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, இந்தி என நடித்து வந்தார் பூமிகா. 2016-ம் ஆண்டு கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி பயோபிக் படத்தில் நடிகர் சுஷாந்த் சிங்கின் அக்காவாக நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பு பேசப்பட்டது. கடைசியாக சமந்தா நடித்த யு-டர்ன் படத்தில் நடித்திருந்தார். 

2007-ம் ஆண்டு தனது காதலர், யோகா ஆசிரியர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான். இடையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் சில படங்களை தயாரித்தார். அவர் தயாரித்தப் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், தயாரிப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் இவர் கணவருக்கும் பிரச்சனை என்றும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகவும் சில வருடங்களுக்கு முன் தகவல் வெளியானது. இப்போது மீண்டும் அதே போன்ற தகவல் பரபரப்பானது. இது சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இதை மறுத்துள்ளார் பூமிகா.

இந்த விவகாரம் குறித்து அவர் கூறும்போது எனது திருமண நாளை இன்று கொண்டாடினேன். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு முன்பும் எங்கள் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியது. அப்போதும் மறுத்தேன். இப்போதும் அதை மறுக்கிறேன். மற்றவர்கள் பரப்பும் தவறான தகவல்களால் எங்கள் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. நாங்கள் நன்றாகவே இருக்கிறோம் என்று பூமிகா கூறியுள்ளார். 

மேலும் தனது திருமண நாளை முன்னிட்டு கணவருக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில் ஆயிரம் மைல் பயணம் என்பது ஒரு சின்ன ஸ்டெப்பில் இருந்துதான் தொடங்குகிறது. அன்பு, அது காதல், கற்றுக்கொள்ளுதல், புரிதல், சிரிப்பு மற்றும் சிறந்த தருணங்களின் பயணம். நம் வாழ்க்கைக்கான உங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கண்டு பெருமை கொள்கிறேன். கடவுள் அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார்.