தமிழ் திரையுலகின் தரமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் விஜய். எமோஷன் கலந்த படைப்புகளால் திரை விரும்பிகளை ஈர்க்கக்கூடியவர். இவர் இயக்கிய மதராசபட்டினம் திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றதை சமீபத்தில் ரசிகர்கள் கொண்டாடினர். இறுதியாக பிரபுதேவா வைத்து தேவி 2 படத்தை இயக்கினார். தற்போது தலைவி திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும். இதில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இதன் ஒரே ஒரு கட்ட படப்பிடிப்பு மட்டும் மீதியுள்ளது. விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். 

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார். இந்த படம் ஓடிடி-ல் வெளியாகக்கூடும் என்று சமீபத்தில் வதந்தி கிளம்பிய நிலையில், தலைவி திரைப்படத்தை திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழுவினர் தெளிவு படுத்தினர். 

தற்போது இந்த படத்தில் நடித்துள்ள நடிகை பாக்யஶ்ரீ இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் தனது பாத்திரம் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். ஜெயலலிதாவின் தாய் வேதாவாக இந்தப் படத்தில் நடிக்கிறாராம். ஜெயலலிதாவின் தாயார் பற்றி வெளியில் தெரியாத பல உணர்ச்சிபூர்வமான காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இது முக்கியமான காட்சி என்பதால், படக்குழு இதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். தலைவியின் வாழ்க்கையில் என்னால்தான் திருப்பம் ஏற்படுவது போன்ற கேரக்டர். கங்கனாவுக்கும் எனக்கும் அதிகமான காட்சிகள் இருக்கின்றன. இப்போதைக்கு இவ்வளவு தான் கூற முடியும் என்று பேசியுள்ளார் பாக்யஸ்ரீ. 

பாலிவுட்டில் சல்மான் கானுடன் மைனே பியார் கியா படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். திருமணத்துக்குப் பிறகு இவர் அதிக படங்களில் நடிக்கவில்லை. தலைவி படத்தை தொடர்ந்து பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஸ்யாம் படத்திலும் நடித்து வருகிறார். ராதா கிருஷ்ண குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.