ஆரம்பத்தில் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்  தமிழில் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் திரைப்படங்களின் மூலம் பிரபலமானார். காக்கா முட்டை திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மனதை கவர்ந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ்.  

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை நடிகர் தனுஷின் வடசென்னை திரைப்படங்களில் நடித்து தமிழ்  சினிமாவில் ஆகச் சிறந்த நடிகைகள் பட்டியலில் சேர்ந்துவிட்டார். நடிகை நயன்தாரா, நடிகை திரிஷா,  நடிகை ஜோதிகா வரிசையில் கதாநாயகிகளை முன்னிறுத்தும் திரைப்படமாக கனா, க/பெ.ரணசிங்கம் திரைப்படங்களில் நடித்து  நல்ல வரவேற்பைப் பெற்றார். 

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல்  தீவிரமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் சார்பில் பல முன்னணி நடிகர் நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கொரோனா விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அதில் “நாம் அனைவரும் கொரோனாவின் இரண்டாவது அலையில் இருக்கிறோம், முதல் அலையை விட இரண்டாவது அலை  நிறைய பேரை பாதித்திருக்கிறது. நுரையீரல் பிரச்சினைகள், ஆஸ்துமா, இதய பிரச்சினைகள் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். தயவுசெய்து வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள் அப்படியே அவசிய காரணமாக வெளியில் வந்தாலும் இரண்டு முக கவசங்களை பயன்படுத்துங்கள் சனிடைசர்-ஐ கட்டாயம் பயன்படுத்துங்கள். முக்கியமாக குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் பெரியவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்” என பல கொரோனா சார்ந்த விழிப்புணர்வு விஷயங்களை வீடியோவில் பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.