விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் கூட்டத்தில் ஒருவராக நின்ற யோகிபாபு, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்து நிற்கிறார். தனக்கே உரித்தான உடல்மொழி, டயலாக் டெலிவரி  என தன் நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் யோகிபாபு.

தான் வெறும் காமெடியன் மட்டுமல்ல தேர்ந்த நடிகர் என்பதை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவந்த கர்ணன் மற்றும் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்து வெளிவந்த மண்டேலா உள்ளிட்ட திரைப்படங்களில் நிரூபித்து காட்டியுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என  அனைத்து முன்னணி நடிகர்களோடும் பணியாற்றி வருகிறார். இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் நெட்ஃபிலிகஸில் நேரடியாக வெளியாகும் நவரசா ஆன்தாலஜி வெப்சீரிஸில் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் சம்மர் ஆஃப் 92 என்னும் எபிசோடில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்ததாக தல அஜித்துடன் வலிமை, தளபதி விஜய்யின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் யோகிபாபுவிற்கு சமீபத்தில் செல்லமகனாக ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில்  இன்று தன் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார் நடிகர் யோகிபாபு. முருகனின் தீவிர பக்தரான யோகிபாபு தன் செல்ல மகனுக்கு விஷாகன் என பெயர் சூட்டியுள்ளார். இந்தப் பெயர் சூட்டு விழாவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.