யாஷ் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் சாப்டர் 1. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை பிரசாந்த் நீல் இயக்க, இந்தப் படத்தில் முதல் பாகத்தின் நடிகர்களுடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் ரமீகா சென் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ரவீனா டண்டன் நடித்துள்ளார். கே.ஜி.எஃப் படத்தின் டீஸர் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு நேற்று வெளியானது. ஜனவரி 8-ஆம் தேதி காலை 10.18 மணிக்கு இந்த டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ஒரு புதிய போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருந்தது. 

கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் கூட்டத்துடன் கலந்திருப்பதால் தனது குடும்பத்தினரும், படக்குழுவினரின் குடும்பத்தினரும் பாதுகாக்க இருக்க அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளார் நடிகர் யாஷ். 6 மாதங்களுக்கு மேலாக திரைப்படப் படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தயாரிப்பில் இருந்த பல படங்கள் முடங்கின. 

பல கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்புக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கோவிட்-19 பரிசோதனை, கட்டாய முகக் கவசம், 100 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

இந்தக் கட்டுப்பாடுகளுடன் கேஜிஃப் 2 படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமானது. இதில் பல சண்டைப் பயிற்சி கலைஞர்களுடன் சண்டையிடுவது, சேற்றில் விழுவது, செயற்கை ரத்தத்தை உடல் முழுவதும் பூசுவது என காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு முடிந்ததும் தன் வீட்டுக்குத் திரும்பாமல் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அறையெடுத்து நாயகன் யாஷ் தங்கியுள்ளார்.

கோவிட்-19 பரிசோதனை செய்து, தனக்குத் தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே மனைவி, குழந்தைகளை தன்னை வந்து சந்திக்க அனுமதித்துள்ளார். இது மட்டுமல்லாமல், கேஜிஎஃப் 2 படப்பிடிப்பில் பங்கேற்ற அனைவருக்குமே கட்டாயப் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார் யாஷ். தனது குடும்பத்தைப் போலவே அவர்களது குடும்பமும் தொற்றால் பாதிக்கப்படக் கூடாது என்பதால் இந்த ஏற்பாடுகளை யாஷ் செய்துள்ளதாகப் படக்குழுவினர் கூறியுள்ளனர்.