தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் விளங்கும் நடிகர் சூர்யா நேற்று முன்தினம் பிறந்த நாள் கொண்டாடினார். நடிகர் சூர்யாவிற்கு திரையுலகைச் சார்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.

நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் நடித்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் டைட்டிலை அறிவிக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் கூடிய வீடியோ ப்ரோமோ பிறந்தநாள் பரிசாக வெளியானது. தொடர்ந்து இரண்டு போஸ்டர்கள் வெளியானது.

மேலும் சூர்யா 39 திரைப்படமான ஜெய்பீம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. ஜெய்பீம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா வழக்குரைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் மணிகண்டன்,  ராஜிஷா விஜயன் மற்றும் லிஜோ மொள் ஜோஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியோடு தனது நன்றியை தெரிவித்திருக்கிறார் நடிகர் சூர்யா.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, “உங்கள் அனைவரின் அன்பான வாழ்த்துக்களும் சமூக பொறுப்புள்ள செயல்களும் இந்த நாளை எனக்கு மிக முக்கிய நாளாக மாற்றியுள்ளது. உங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறது.