தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா அடுத்ததாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துவருகிறார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் உருவாக இருக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வருமான வரி வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு கோரிய வழக்கு குறித்து நடிகர் சூர்யா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற வருமான வரி சோதனையின்போது 2008-2009 ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து 2011 ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை தீர்ப்பாயத்தில் சூர்யா மனுத்தாக்கல் செய்ய வருமான வரித்துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த வருமான வரித்துறை தீர்ப்பாயம் மதிப்பீடு செய்யப்பட்ட அந்த ஆண்டுகளுக்கான வரி தொகை முழுவதையும் செலுத்தும்படி உத்தரவிட்டது.

இதில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு  மதிப்பீடு செய்யப்பட்ட வரி பற்றி முடிவு காணப்பட்டதால் வருமான வரி சட்டப்படி மாதம் ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதிலிருந்து விலக்கு அளிக்குமாறு நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் தற்போது இதுகுறித்து சூர்யா தரப்பிலிருந்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “தான் முறையாக வரியும் வரிக்கான வட்டியையும் செலுத்தி முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும், வருமான வரி துறை தீர்ப்பாயத்தின் தாமதத்தால் வருமான வரிக்கு வட்டி செலுத்த பட்டுள்ளதாகவும் அந்த வட்டிக்கான விலக்கு கோரியே வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நகல் கிடைத்ததும் உடனடியாக மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.