சகோதரர்களான நடிகர் சூர்யாவும் நடிகர் கார்த்தியும் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர  நடிகர்களாக இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இவர்கள் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகி தங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே பெற்றிருக்கிறார்கள்.

நடிகர் சூர்யா இயக்குனர் மணிரத்தினத்தின் தயாரிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளிவர இருக்கும் “நவரசா” வெப்சீரிஸ் நடித்து வருகிறார்.அடுத்ததாக  நடிகர் கார்த்தி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட நடிகர் சூர்யா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர் கல்வியையும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறார். இவரது அகரம் ஃபவுண்டேஷன் மூலமாக எத்தனையோ ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் தமிழகத்தில் மருத்துவராகவும் பொறியாளராகவும் இளங்கலை முதுகலை பட்டதாரிகளாகவும்  மாறியது நாம் அறிந்த விஷயம். 

முன்னதாக இந்தக் கடினமான கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு  நடிகர்கள் சூர்யா,கார்த்தி இருவரும் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி செய்தனர்.

அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா 5,000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். அதேபோல நடிகர் கார்த்தியும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 150 பேருக்கு தலா 5000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். நடிகர் சூரியா நடிகர் கார்த்தியின் இந்தத் தொடர் நற்பணிகள் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.