தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் கனா , நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, வாழ் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்திருக்கும் டாக்டர் மற்றும் தான் உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் வாழ் திரைப்படம் நேரடியாக சோனி லிவ் (SONYLiv) OTT தளத்தில் வருகிற ஜூலை 16 ஆம் தேதி வெளியாகிறது. நேற்று வாழ் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. விறுவிறுப்பான வித்தியாசமான இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் நேற்று  இத்திரைப்படத்தின் இசை வெளியீடும் நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டில் நடிகர் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன், இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், இசையமைப்பாளர் பிரதீப்குமார் மற்றும் நடிகர் பிரதீப் ஆண்டனி கலந்து கொண்டனர். இந்த இசை வெளியீட்டின் போது சிவகார்த்திகேயன் முக்கிய தகவலை மனம் திறந்து பகிர்ந்து கொண்டார்.

முன்னதாக அருவி திரைப்படத்திற்கு முன்பாக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயனிடம் வாழ் திரைப்படத்தின் கதையை விவரித்தபோது அந்தக் கதையை அந்த சமயத்தில் சரியாக புரிந்து கொள்ளாமல் அதில் கதாநாயகனாக  நடிக்காமல் விட்டதாகவும் “நான் நடித்திருக்க வேண்டிய படம்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அருவி திரைப்படம் பார்த்தப்பின் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் தாக்கம் இருந்தது என்றும், மேலும் வாழ் திரைப்படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

வாழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள பிரதீப்  ஆண்டனி முன்னதாக இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கிய அருவி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.