தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த ருசிகர தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சென்னை 600028 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வெங்கட்பிரபு. தொடர்ந்து சரோஜா, கோவா, மங்காத்தா, சென்னை 600028-|| என தொடர் வெற்றிப் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் உடன் இணைந்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய திரைப்படம் மாநாடு. 

நடிகர் சிலம்பரசன், S.J.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, S.A.சந்திரசேகரன் கருணாகரன்,  பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மாநாடு திரைப்படத்திற்கு தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

முன்னதாக ரம்ஜான் தினத்தன்று இத்திரைப்படத்தின் முதல்பாடல் வெளியிடுவதாக இருந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை உயிரிழந்ததன் காரணமாக அதன் ரிலீஸ் அப்போது தள்ளிப்போனது. மீண்டும் மாநாடு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு  விரைவில் அறிவிக்கப்படும்  என தயாரிப்பாளரின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் பாடல்கள் பற்றிய புதிய தகவல்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் "மாநாடு திரைப்படத்தின் பாடல் உரிமைகளை  இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் நிறுவனமான U1 ரெக்கார்டுஸ் நிறுவனம் பெற்றுள்ளது. முதல் பாடல் வெளியீட்டு தேதி மற்றும் நேரம் பற்றிய அறிவிப்புகளை (ஜூன் 9ஆம் தேதி) நாளை இளைய மேஸ்ட்ரோ அறிவிப்பார் என தெரிவித்துள்ளார். முன்னதாக இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நாளை மாநாடு திரைப்படத்தின் பாடல் ரிலீஸ் தேதி மற்றும் நேரத்தை இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா அறிவிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.