இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து விரைவில் வெளிவர உள்ள திரைப்படம் மாநாடு. நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, இயக்குனர் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இயக்குனர் S.A.சந்திரசேகரன், இயக்குனர் இமயம் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் மாநாடு திரைப்படத்தின் பாடல் உரிமைகளை யுவன் ஷங்கர் ராஜாவின்  U1ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இத்திரைப்படத்தின் முதல் பாடலாக “மாஷா அல்லாஹ்” வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாகிறது. முன்னதாக மாநாடு  திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மாநாடு திரைப்படத்தின் பாடல் வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல்களுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். 

சமீபத்தில் மாநாடு  திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் திரைப்படம் கட்டாயமாக தியேட்டரில்தான் வெளிவரும் OTT யில் வெளியாகாது என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். விரைவில் திரைக்கு வரவுள்ள மாநாடு திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து மாநாடு திரைப்படத்தின் டப்பிங்கில் பணியாற்றிவரும் நடிகர் உதயா பதிவிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் “வேற லெவல் காட்சிகள்! மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. திரைப்படத்தை காண்பதற்கு காத்திருக்க முடியவில்லை .நடிகர் சிலம்பரசன் அசத்திவிட்டார் .வாவ் எஸ்.ஜே.சூர்யா சார். நண்பர் இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு நன்றி நீங்கள் இன்னும் அசத்த போகிறீர்கள் முதலாளி சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் நன்றி” எனத் தெரிவித்து டப்பிங்கில் ஈடுபடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் நடிகர் உதயா. 

மாநாடு திரைப்படம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்தடுத்து வரும் இது மாதிரியான தகவல்கள் இன்னும் எதிர்பார்ப்புகளை எதிர்பார்க்கிறது என சொல்லலாம்.