திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இன்று வரை செந்தில் - கவுண்டமணி காம்போவுக்கு இணை யாருமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் இருவரும். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செந்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக-வில் இருந்த நடிகர் செந்தில் பாஜக-வில் இணைந்தார்.

இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது. அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் செந்தில் தனது குடும்பத்தினருடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவரின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிகிச்சை முடிந்து மூன்று நாட்களில் நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திரைத்துறை நட்சத்திரங்கள் அரசியல் பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடிக்க இருக்கிறார்.