எதார்த்தமான டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் சதீஷ். 2006-ம் ஆண்டு ஜெர்ரி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர், பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர்த்து சசிகுமார் நடிக்கும் ராஜவம்சம், ஜெயம் ரவியுடன் பூமி, ஆர்யா நடிக்கும் டெடி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

கொரோனா காரணமாக சென்ற லாக்டவுனில் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியிருந்த திரை பிரபலங்களில் சதீஷும் ஒருவர். படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்தார். சமீபத்தில் கொரில்லா படப்பிடிப்பு தளத்தில், ஸ்டண்ட் காட்சியின் போது டூப் ஆர்ட்டிஸ்ட் நடித்த காட்சியை வீடியோ பதிவு செய்து பகிர்ந்தார் சதீஷ். இந்த வீடியோ இணையவாசிகள் விரும்பும் வகையில் அமைந்தது. 

சென்ற லாக்டவுன் நடிகர் சதீஷுக்கு ஸ்பெஷல் என்றே கூறலாம். நேரம் கிடைக்கையில் லைவ்வில் தோன்றி தனது திரைப்பயணம் பற்றியும், முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பகிர்ந்து கொண்டார். வீணை வாசிப்பது, தந்தைக்கு ஷேவிங் செய்வது என பல வீடியோக்கள் வெளியிட்டு அசத்தி வருகிறார். சில நாட்கள் முன்பு ஃபேஸ்ஆப் மூலம் நடிகர் சதீஷை டாம் க்ரூஸ் போல் மாற்றி வீடியோவை பகிர்ந்தனர் சதீஷ் ரசிகர்கள். இணையவாசிகளின் செல்ல பிள்ளையான சதீஷின் ட்வீட்டுக்கென ரசிகர் பட்டாளம் உண்டு. 

இந்நிலையில் நடிகர் சதீஷுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உங்கள் ஆசிகள் தேவை என்று பதிவு செய்தார். தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல் வெளியானது. தந்தையான நடிகர் சதீஷுக்கு வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர் ரசிகர்கள். பெண் குழந்தை பிறந்த நேரம், இனி உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் என்று கமெண்ட் செய்து வாழ்த்தி வருகின்றனர் இணையவாசிகள்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சதீஷ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை சிவா இயக்கி வருகிறார். கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் 2ம் வாரம் முதல் துவங்க உள்ளது என தகவல் பரவி வருகிறது. இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

ஹைதராபாத்தில் தான் அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, குஷ்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நெகட்டிவ் வேடத்தில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ரோப் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக இணையத்தில் செய்திகள் வருகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.