கோலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகராகவும், என்றும் கட்டுடலுடன் இளமையாகவும் இருப்பவர் நடிகர் சரத்குமார். கதாநாயகன், வில்லன், குணச்சித்திரக் கதாபாத்திரங்கள், தயாரிப்பாளர், நடிகர் சங்கத் தலைவர் எனத் திரையுலகில் அனைத்தையும் பார்த்த பெருமை இவருக்கு உண்டு. சீனியர் நடிகராக இருந்தாலும் 90ஸ் கிட்ஸ் விரும்பும் நாட்டாமையாக திகழ்கிறார். 

இந்நிலையில் நடிகர் சரத்குமாருக்கு கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளதாக அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகினர். சரத்குமார் தற்போது ஹைதராபாத்தில் உள்ளதாகவும், அவருக்கு அறிகுறியற்ற நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நல்ல மருத்துவர்கள் அவருடன் இருந்து சிகிச்சையளித்து வருவதாக தெரிவித்தார். அடுத்த நாட்களில் அவரது உடல்நிலை குறித்து கூறுகிறேன் என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை ராதிகா. 

தினசரி உடற்பயிற்சி செய்து, சரியான உணவு முறை மேற்கொண்டு, ஃபிட்டாக இருக்கும் சரத்குமாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை என்று பதிவு செய்து வருகின்றனர் இணையவாசிகள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனா குறித்த பேச்சுகள் ஏதும் இல்லை என்று நினைத்த நேரத்தில் இப்படி ஆட்டம் காண்பிக்கிறது இந்த கொடிய வைரஸ். 

சமீபத்தில் சரத்குமாரின் Bird of Prey என்ற ப்ராஜெக்ட்டின் புகைப்படங்கள் வெளியானது. ஓடிடி தளத்திற்காக முதல் முறையாக நடிக்கும் சரத்குமாரை வரவேற்றனர் திரை ரசிகர்கள். இது வெப் சீரிஸா அல்லது படமா என்பது குறித்த தகவலும் கிடைக்கவில்லை. அர்ச்சனா என்பவர் எழுதிய Birds of Prey என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

க்ரைம் த்ரில்லராக உருவாகவிருக்கும் இந்த பேர்ட்ஸ் ஆப் பிரே-வின் படப்பிடிப்பு பணிகள் பற்றிய விவரம் விரைவில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் துவக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் தனா இயக்கியிருந்த வானம் கொட்டட்டும் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சரத்குமார்.