கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் ராஜசேகர் டிஸ்சார்ஜ் !
By Sakthi Priyan | Galatta | November 10, 2020 13:28 PM IST

டாக்டர் ராஜசேகர் தமிழில் இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட பல படங்கள் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி ஜீவிதாவும் தமிழில் தப்புக்கணக்கு, தர்ம பத்தினி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர்களது மகள் ஷிவானி தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்கள் மகள்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.
மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர் ராஜசேகர், ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருந்தார். மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம் என்று கூறி இருந்தார்.
ஜீவிதா குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில் அவர்கள் மகள் ஷிவாத்மிகா, கொரோனாவுடன் அப்பா போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது. பின்னர் மற்றொரு ட்விட்டில், அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார். மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், சுமார் மூன்று வார சிகிச்சைக்குப் பின் அவர் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதை நடிகை ஜீவிதா தெரிவித்துள்ளார். சிறப்பான சிகிச்சை அளித்து தனது கணவரை காப்பாற்றியதற்காக, மருத்துவமனைக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஜீவிதா நன்றி தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.