கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வைரஸ் தொற்றை முடிந்தவரை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போதிய ஆக்சிஜன் வசதியின்மை மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
சுழற்சிமுறையில் நாடு முழுவதும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஊரடங்கு காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த நிலையில், இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்யும் வகையில் அரசாங்கமும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதற்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி செய்யுமாறு முதல்வர் வேண்டுகோள் வைத்திருந்தார். அதன்படி பலரும் நிதி உதவிகளை அளித்து வந்தனர் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பலரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது பங்களிப்பாக நிவாரண நிதி உதவியை வழங்கினார்.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் பிரஷாந்த் மற்றும் அவரது தந்தையான இயக்குனர் தியாகராஜன் இருவரும் இன்று தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து 10 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். முன்னதாக திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் நிவாரண உதவி செய்து வந்த நிலையில் ,தற்போது நடிகர் பிரசாந்த் மற்றும் இயக்குனர் தியாகராஜன் இருவரும் நிதி உதவி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக நடிகர் பிரசாந்த் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். அந்தகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தை
 இயக்குனரும் நடிகருமான தியாகராஜன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் அந்தகன் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாலிவுட்டில் நடிகை தபு நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிகை சிம்ரன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது