திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி  பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என இந்திய திரையுலகின் பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்கள் நடிகர், கதாநாயகன்,நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட திரை கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. கடைசியாக தமிழில் இயக்குனர் A.L.விஜய் இயக்கிய தேவி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.  

அடுத்ததாக நடிகர் பிரபுதேவா நடித்துள்ள பொன்மாணிக்கவேல் மற்றும் யங் மங் சங் ஆகிய இரண்டு திரைப்படங்களும் படப்பிடிப்பை நிறைவு செய்து திரைக்கு வர தயாராக உள்ளன. மேலும் ஊமை விழிகள் & பஹீரா ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளிவரவுள்ள நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்ததாக ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களை இயக்கிய சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 

மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக வெளிவர உள்ள இந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் என அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.