கன்னடத்தில் நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் முஃப்தி. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி, பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அந்தப் படத்தின் மீதான பிரச்சினைகள் அனைத்துமே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன. 

சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா மீதமுள்ள காட்சிகளை இயக்கவுள்ளார். பத்து தல என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதில் தாசில்தார் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் டிஜே ஒப்பந்தமாகினார். நேற்று டீஜேவின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் அறிவிப்பை தற்போது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர். 2019-ம் ஆண்டு தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் டாக்டராக நடித்திருந்தார். எழுத்தாளரான இவர் நடிப்பிலும் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

பத்து தல படத்தின் இதர காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இன்னும் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதைப் படக்குழுவினர் முடிவு செய்யவில்லை என்பது நினைவுகூரத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியானாலும், படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

பத்து தல ராவணன் என்பதற்கேற்ப இந்த படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கலந்த அதிரடி வேடம் என்கிறார்கள். பிப்ரவரியில் நடக்கும் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள இருப்பதாக திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிலம்பரசன்.