மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்கிய கைதி படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். கதாநாயகிகளும் பாடல் காட்சிகளும் இல்லாமல் வெளியான கைதி திரைப்படம் கமர்ஷியலாக மாஸ் ஹிட் அடித்தது.

இதையடுத்து தளபதி விஜயுடன் இணைந்த லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தை இயக்கினார். தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் மிரட்டலான நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக முடங்கிய திரையரங்குகளை  திருவிழா கோலமாக்கியது.

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டது. முன்னதாக வெறித்தனமான டைட்டில் டீசர் வெளியிடப்பட்ட  இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

பரபரப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பில் தற்போது தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான, நடிகர் நரேன் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து கைதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிகர் நரேன் நடித்துள்ள நிலையில் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜுடன் இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.