கடந்த 2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் காதலில் விழுந்தேன் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். 

சிறந்த நடிகரான இவர் சீரான பாடகரும் கூட. அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். இந்த லாக்டவுனில் தனது மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடிய நகுல் அன்றைய தினத்தில் தான் மனைவி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்தார். ஊரடங்கு காரணமாக எளிமையாக வளைகாப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார். 

2016-ம் ஆண்டு தன்னுடைய காதலி ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது. இதனை நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோவுடன் பகிர அது வைரலானது. இந்நிலையில் தனது மகளின் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அதில், தனது மகளுக்கு அகிரா என்று பெயர் சூட்டியுள்ளார். முழு பெயர் Akira Sruti Betarbet ஆகும். அப்போது பேட்டர்பெட் என்பது நகுலின் குடும்ப பெயராம். 

நகுல் நடிப்பில் எரியும் கண்ணாடி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. சச்சின் தேவ் இயக்கும் இந்த படத்தை கண்ணன் தயாரிக்கிறார். சுஜாதா எழுதிய நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது. சுனைனா ஜோடியாக நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.