பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர் காதலில் விழுந்தேன் படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதன் பிறகு மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். 

சிறந்த நடிகரான இவர் சீரான பாடகரும் கூட. அந்நியன் படத்தில் காதல் யானை, கஜினி படத்தில் எக்ஸ் மச்சி, காதலில் விழுந்தேன் படத்தில் நாக்கு முக்கா உள்ளிட்ட பாடல்களை நகுல் தான் பாடி உள்ளார். இவர் கடைசியாக 2014 ல் பார்த்திபன் நடிப்பில் வெளியான கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில், தமான் இசையில், நிரஞ்சன் பாரதி எழுதி பாடல் ஒன்றை பாடியிருந்தார்.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின் சமீபத்தில், இயக்குனர் சதுசன் மங்களராஜா இயக்கும் புதிய படம் ஒன்றிற்காக பாடல் ஒன்றை பாடி உள்ளார். இப்படத்திற்கு அஷ்வத் இசை அமைக்கிறார். க்ரைம் த்ரில்லர் படமான இதில் பிரதாப் போத்தன், மணிகண்டன் ஆசாரி ஆகியோர் நடிக்க உள்ளனர். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

பாடல் ரெக்கார்டிங் முடிந்த பிறகு பேசிய நகுல், மீண்டும் பின்னணி பாட வந்துள்ளது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அஷ்வத் இசையில் பாடியது நிறைவான அனுபவத்தை கொடுக்கிறது. இது துள்ளல் இசை பாடல் தான். இருந்தாலும் மெலோடியும் கலந்துள்ளது என்றார்.

இசையமைப்பாளர் அஷ்வத் கூறுகையில், இந்த பாடலை நகுல் பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதற்காக நகுலுக்கு மெசேஜ் செய்தேன். அவரது உடனடியாக ஒப்புக் கொண்டார். அனைவருக்கும் தனது குரலில் திருப்தி என்றால் மட்டும் முழு பாடலை பாடுவதாக அவர் கூறினார். பாடல் நன்றாக வந்துள்ளது என்றார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝙉𝙖𝙠𝙠𝙝𝙪𝙡 𝙅𝙖𝙞𝙙𝙚𝙫 (@actornakkhul)