தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த்சாமி இணைந்து நடித்த தனிஒருவன் திரைப்படத்திற்கு இசை அமைத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலம் அடைந்தார் 

தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கவன், சிலம்பரசனின் வந்தா ராஜாவா தான் வருவேன்,  சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், ஜெயம் ரவியின் கோமாளி, விஷாலின் ஆக்ஷன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் நடிகராகவும் தற்போது பல திரைப்படங்களை இயக்கி நடித்து வருகிறார். 

முன்னதாக மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் இன்டி ரெபெல்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் சிவகுமாரின் சபதம் திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும் அன்பறிவு என்னும் திரைப்படத்தில் அன்பு மற்றும் அறிவு என இரண்டு கதாபாத்திரங்களில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இசையமைப்பாளர், இயக்குனர், நடிகர் என பல பரிமாணங்களில் வலம்வரும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோவர்களைக் கொண்ட யூட்யூப் சேனலான ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது ஹிப் ஹாப் தமிழாவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.