இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT STUDIOS தயாரிப்பில்  நடிகர் தனுஷின் மிரட்டலான நடிப்பில்  ஜகமே தந்திரம் திரைப்படம் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து  பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக இத்திரைப்படத்தின் டீசர் ,டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி இத்திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகிறது. 

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான  ஜோஜூ ஜார்ஜ் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் சிவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட ஜோஜூ ஜார்ஜ், 

“நான் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் மிகப்பெரிய ரசிகன். பீட்சா திரைப்படத்திற்கு பிறகு அவரை சந்திக்க முயற்சி செய்தேன் ஆனால்  சந்திக்க முடியவில்லை. பிறகு மலையாள  திரையுலகிற்கு வந்து பல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். கடைசியாக ஜகமே தந்திரம் திரைப்படத்தின் எடிட்டர் விவேக் ஹர்ஷன் மற்றும் டிமல் டென்னிஸ்  மூலமாக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சந்தித்தேன். மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதால் என்னை ஆடிஷன்க்கு அழைத்தார். எனக்கு ஒரு காட்சியை விவரித்து நடித்துக் காட்ட சொன்னார். கொஞ்சம் சுமாரான தமிழில் நான் அந்த காட்சியை நடித்துக் காட்டியதும் என்னைப் பார்த்து சாதாரணமாக சிரித்தார் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோவுடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்த ஜோஜூ ஜார்ஜ் “மிகப் பெரிய ஹாலிவுட் ஸ்டாராக இருக்கும் ஜேம்ஸ் காஸ்மோ தான் (இத்திரைப்படத்தில்) எனக்கு  எதிரி என்பது எனக்கு தெரியும்.நான் நேரில் பார்த்த முதல் ஹாலிவுட் நடிகர் இவர்தான்.இவரோடு இணைந்து நான் பணியாற்றியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகும்” என மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். 

ஏற்கனவே ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் தற்போது நடிகர் ஜோஜூ ஜார்ஜின் இந்த பகிர்வும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.