இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான சென்னை 600028 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஜெய், பின்னர் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் அழகர் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ்  ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். தொடர்ந்து கோவா ராஜாராணி வடகறி பலூன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அடுத்ததாக நடிகர் ஜெய் நடிப்பில் பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, குற்றமே குற்றம், சிவ சிவா உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சுந்தர்.சி-யின் தயாரிப்பில் இயக்குனர் பத்ரி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது நடிகர் ஜெய் ஒரு மேஜையை உடைக்கும் படியான ஒரு காட்சி படமாக்கப்பட்டது அப்போது எதிர்பாராத விதமாக நடிகர் ஜெய்யின் தோள்பட்டை இடம்பெயர்ந்தது. உடனடியாக அவரை பரிசோதித்த பிசியோதெரபி குழுவினர் நடிகர் ஜெய் ஓய்வெடுக்க அறிவுறுத்தினர். 

ஆனால் வலியை பொருட்படுத்தாமல் ஜெய் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். வலியோடு தொடர்ந்து ஆபத்தான சண்டை காட்சிகளில் தானே நடித்துள்ளார். அவர் ஒருவரது ஓய்வு மொத்த படக்குழுவின் உழைப்பையும் வீணாக்கிவிடும் அந்த நாளை வீணாக்கிவிடும் என மொத்த படக்குழுவின் நலனை கருத்தில் கொண்டும், இன்றைய நாளின் படப்பிடிப்புக்காக பெற்ற அனுமதியை மீண்டும் பெறுவது கடினமாக இருக்கும் என்பதையும் மனதில் கொண்டும் இந்த கடினமான சூழ்நிலையிலும் ஜெய் செய்த இந்த துணிச்சலான காரியம் அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 

அடுத்ததாக இயக்குனர் கோபி நயினார் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திலும் இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனர் இயக்கத்தில் இயக்குனர் அட்லி எழுதி தயாரிக்கும் புதிய திரைப்படத்திலும் நடிகர் ஜெய் நடிக்க உள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.