தமிழ் திரையுலகில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்த புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அவர்கள் நடிகராக  மட்டுமல்லாமல் தமிழக அரசியல் களத்திலும் தனது தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் அரசியல் கட்சியையும்  நடத்திவருகிறார். 

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல் நிலை பிரச்சனைகள் காரணமாக பல சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார் விஜயகாந்த். குறிப்பாக கடந்த 2017ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு மோசமான உடல்நிலை காரணமாக விஜயகாந்த்துக்கு சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து குரல் சம்மந்தமான பிரச்சனைகள், தைராய்டு, சிறுநீரக கோளாறு என தொடர்ந்து சென்னை  மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இந்த சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் செல்கிறார் விஜயகாந்த்.

லண்டனில் இருந்து வரும் மருத்துவர் அளிக்கும் பேச்சுப் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளுக்காக துபாய்க்கு விஜயகாந்த் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக இன்று விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் துபாய் புறப்பட்டுள்ளார். அவரோடு அவரது இளைய மகன் சண்முக பாண்டியனும் உதவியாளர்களும் செய்கிறார்கள். முன்னதாக வெளிநாடு செல்வதற்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்பதால் இவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு பிறகு புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.