தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சேரன் பாரதிகண்ணம்மா, பொற்காலம், பாண்டவர்பூமி, ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் என தமிழ் சினிமாவிற்கு பல பல சிறந்த திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சேரன், இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் தயாராகி வரும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனந்தம் விளையாடும் வீடு படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் வீடு முக்கிய பங்கு வகிப்பதால் அந்த வீட்டில் நடந்த படப்பிடிப்பின்போது இயக்குனர் சேரன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். 

அதில் இயக்குனர் சேரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலையில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தன் பகுதி காட்சிகளை நிறைவு செய்துள்ளார் இயக்குனர் சேரன். இயக்குனர் சேரனின் இந்த அர்ப்பணிப்பை தற்போது பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இயக்குனர் சேரன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது நலமாக இருப்பதாகவும் காயம்  ஆறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.