நடிப்பின் அசுரனாக வளர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் இந்திய அளவில் பிரபல நடிகர்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகராகத் திகழும் தனுஷ் ஹாலிவுட் திரையுலகிலும் கால் தடம் பதித்து விட்டார். முன்னதாக தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபக்கிர் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்தார்.

தற்போது ஹாலிவுட் திரையுலகில் பிரபலமான அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இயக்கும் புதிய திரைப்படமான தி க்ரே மேன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். புகழ்பெற்ற அவெஞ்சர்ஸ் காமிக் கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்காவாக நடித்த கிரிஸ் எவன்ஸ் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் தி கிரேட் மேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெ‌ரி‌க்காவில் பரபரப்பாக நடந்து வந்தது. 

சில வாரங்களாக நடிகர் தனுஷ் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பணியாற்றி வந்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது என இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் அறிவித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில்  நடிகர் தனுஷ், தன் பகுதி காட்சிகளின் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு தொடர்பாக ட்விட்டர் ஸ்பெஸில் பேசிய நடிகர் தனுஷ் விரைவில் இந்தியா திரும்புவதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில் தன் பகுதி காட்சிகளை முடித்து நடிகர் தனுஷ் இன்னும் இரு வாரங்களில் இந்தியா திரும்ப உள்ளதாக தெரிகிறது. நடிகர் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் ஹாலிவுட் திரைப்படம் நேரடியாக NETFLIX OTT தளத்தில் வெளியாக உள்ளது. ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் இம்மாதம் 18ஆம் தேதி NETFLIX OTT தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் தி க்ரே மேன் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.