தொடர்ந்து விதவிதமான கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பால் மக்களை மகிழ்வித்து வரும் சிறந்த கலைஞன் ஆன நடிகர் தனுஷ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து நடித்த ஜகமே தந்திரம் திரைப்படம் இந்த மாதம் 18ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் வெளிவருகிறது.Y NOT ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் சுருளி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக மிரட்டியுள்ளார். 

கேங்ஸ்டர் திரைப்படங்களின் மீது தீவிர ஈர்ப்பு கொண்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜகமே தந்திரம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

முன்னதாக இத்திரைப்படத்தின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்று வரும் நிலையில் நேற்று ஜகமே தந்திரம் திரைப்பட பாடல்கள் வெளியீடு குறித்து ட்விட்டர் ஸ்பேஸில் இணைந்த நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ரசிகர்கள் மத்தியில் பேசினர். இந்த ட்விட்டர் ஸ்பேஸில் பேசும்போது 17000க்கும் மேற்பட்டோர் இணைந்தது  ட்விட்டரில் உலக சாதனை படைத்துள்ளது. ட்விட்டர் ஸ்பேஸில் நேற்று பேசிய போது நடிகர் தனுஷ் ஜகமே தந்திரம்-2 பற்றி ருசிகர தகவல் வெளியிட்டார்.

“ஜகமே தந்திரம் திரை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கப்போகும் வரவேற்பும் அதன் வெற்றியும் ஜகமே தந்திரம் 2 பற்றி எங்களை முடிவு செய்ய வைக்கும். மேலும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜும்  நல்ல கதைகளத்தோடு வந்தால்  நன்றாக இருக்கும். ஆனால் என்னை கேட்டால் நான் கட்டாயம் ஜகமே தந்திரம் 2  நடிக்க விரும்புகிறேன். ஏனென்றால் இதற்கு முன் மாரி திரைப்படத்தில் மாரி கதாபாத்திரத்தை மிகவும் ரசித்து உற்சாகத்தோடு நடித்தேன். எனவே தான் மாரி-2 உருவானது. அதேபோல ஜகமே தந்திரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் சுருளி கதாபாத்திரத்தை மிகவும் ரசித்து நடித்தேன் எனவே நான் மீண்டும் சுருளாக நடிக்க தயாராக இருக்கிறேன் ஆனால் முன்பே சொன்னது போல கார்த்திக் சுப்புராஜும் கதையோடு தயாராக வரவேண்டும்” என தெரிவித்துள்ளார். 

இன்னும் ஜகமே தந்திரம் திரைப்படமே வெளிவராத நிலையில் ஜகமே தந்திரம் இரண்டாம் பாகத்தைப் பற்றி தனுஷ் பேசியிருப்பது ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது ரசிகர்கள் அனைவரும் சுருளியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.