இந்திய திரை உலகின் இன்றியமையாத நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் இதுவரை இந்த ஆண்டு வெளிவந்த மாறன், தி க்ரே மேன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்கள் வெளி வந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நடித்த நானே வருவேன் திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே சில தினங்களுக்கு முன்பு கன்னடத்தில் வெளியான கண்டாரா திரைப்படத்தை பார்த்து ரசித்த நடிகர் தனுஷ் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார். கேஜிஎஃப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான HOMBALE FILMS நிறுவனம் தயாரிப்பில் ரிஷப் செட்டி இயக்கி நடித்துள்ள கண்டாரா படத்தில் கிஷோர், அச்சுத் குமார், பிரமோத் செட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தமிழகத்தின் ஜல்லிக்கட்டை போலவே கர்நாடகத்தில் பாரம்பரியமான கம்பாலா வீர விளையாட்டை மையப்படுத்தி ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்துள்ள கண்டாரா திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்நிலையில், கண்டாரா படம் பார்த்த தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கண்டாரா - பிரமிக்க வைக்கிறது… கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம்... ரிஷப் ஷெட்டி, உங்களை நினைத்து நீங்கள் பெருமை கொள்ள வேண்டும்... வாழ்த்துக்கள் HOMBALE FILMS... இத்திரைப்படத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷின் அந்த பதிவு இதோ…
 

Kantara .. Mind blowing !! A must watch .. Rishab Shetty , you should be very proud of yourself. Congratulations hombale films .. keep pushing the boundaries. A big hug to all the actors and technicians of the film. God bless

— Dhanush (@dhanushkraja) October 14, 2022