இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை!

விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தற்கொலை,actor composer vijay antony daughter meera passes away by suicide | Galatta

தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் விஜய் ஆண்டனி அவர்களின் மூத்த மகளான மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை 3 மணி அளவில் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தனக்கென தனி பாணியில் பல அட்டகாசமான பாடல்களை கொடுத்த இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி - பாத்திமா தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். 

இவர்களில் மூத்த மகளான மீரா வீட்டில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அவருக்கு வயது 16. அதிகாலை 3 மணி அளவில் தூக்கில் தொங்கியபடி இருந்த மீராவை உடனடியாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கே அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீராவின் தற்கொலை தொடர்பாக தற்போது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். 

அந்த வகையில் முதற்கட்டமாக பகுப்பாய்வு செய்யும் வகையில், தடயவியல் நிபுணர்கள் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த அறையில் தங்களது சோதனை தொடங்கி இருப்பதாக தெரிகிறது. இது குறித்த விவரங்கள் மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனி அவர்களின் குடும்பத்திற்கு பேரிழப்பாக அவரது மகள் தற்கொலை செய்துள்ள சம்பவம் திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் ஆண்டனி அவர்களின் மகள் மீரா அவர்களின் மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல் திரைப் பிரபலங்களும் ரசிகர்களும் விஜய் ஆண்டனி அவர்களின் குடும்பத்தாருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். விஜய் ஆண்டனி அவர்களின் 16 வயது மகள் மீராவின் இந்த திடீர் தற்கொலை குறித்த இதர விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அடுத்த சில மணி நேரங்களில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளிவருகின்றன. அதற்கான உடற்கூறு ஆய்வு , தடயவியல் சோதனைகள் மற்றும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது.