திரைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் சித்ரா லட்சுமணன். மேலும் இயக்குனர் பாரதிராஜாவுடன் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் அவரது சகோதரர் சித்ரா ராமுவுடன் இணைந்து அவரது அனைத்து படங்களிலும் இணை தயாரிப்பாளராக பணியாற்றினார். 1983 ஆம் ஆண்டில், காயத்ரி பிலிம்ஸின் கீழ் மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தார். 

1980 களில் தமிழ் படங்களுக்கான பத்திரிகை உறவு அதிகாரியாகவும் பணியாற்றினார். கமல்ஹாசனுடன் சூரா சம்ஹாரம், பிரபுவுடன் பெரிய தம்பியை மற்றும் கார்த்திக்குடன் சின்ன ராஜா போன்ற படங்களை இயக்கினார். நடிகராகவும் தன்னை உயர்த்தி கொண்டார் சித்ரா லட்சுமணன். ஜப்பானில் கல்யாண ராமன், உன்னை நினைத்து போன்ற படங்களில் இவரது நடிப்பு பாரட்டப்பட்டது. 

ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்தது. தற்போது சாய் வித் சித்ரா எனும் யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார். டிஜிட்டல் தளத்தில் சினிமா தொடர்பான நேர்காணல் மற்றும் சினிமா கதைகளை கூறி என்டர்டெயின் செய்து வருகிறார். 

சித்ரா லட்சுமணனின் சகோதரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இது குறித்து சித்ரா லட்சுமணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் கொரோனா எங்கள் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. 

நேற்று இரவு என் ஆருயிர் சகோதரி சாந்தாவின் உயிரைப் பறித்துக் கொண்டது. தன் வாழ்நாளில் யாரையும் எப்போதும் எதற்காகவும் கடிந்து கொள்ளாத அவர்  தன்னுடைய பெயருக்கேற்ப சாந்தமான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவருடைய ஆத்மா மோட்சத்தை அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நண்பர்களே அவருக்காக நீங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார். 

இதை பார்த்த ரசிகர்கள், இரங்கல் பதிவை செய்து, அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.