நடிகர் பாலாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கவுரவு படுத்திய அமெரிக்க பல்கலைக்கழகம் !
By Sakthi Priyan | Galatta | January 19, 2021 17:06 PM IST

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குனர் சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிஸியான நடிகராக இருந்து வருகிறார். சிவா இயக்கத்தில் தல அஜித்துடன் இணைந்து வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக அசத்தினார். நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குநர் அவதாரமும் எடுத்தார் பாலா. கடைசியாக கார்த்தி மற்றும் ஜோதிகா இணைந்து நடித்த தம்பி படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம் நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. ஒவ்வொரு துறைக்கு ஏற்ப அவரவர் செய்த சாதனைகளையும் சேவைகளையும் மையப்படுத்தியே கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் பாலா கலைத்துறையை சேர்ந்தவர் என்றாலும் அவருக்கு மனிதாபிமானம் மிக்க செயல்பாடுகள் என்கிற பிரிவில் இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் இந்த கவுரவ டாக்டர் பட்டம் இதற்கு முன்பு வட இந்தியாவில் ஷாருக்கானுக்கும், தற்போது தென்னிந்தியாவில் நடிகர் பாலாவுக்கும் என இருவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது தான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். தென்னிந்தியாவிலேயே மனிதாபிமானத்திற்காக டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரான நடிகர் பாலாவை, வரும் ஜன-24ஆம் தேதி, கேரள மாநில முதல்வர் மாண்புமிகு. திரு. பினராயி விஜயன் கவுரவிக்க இருக்கிறார்.
இந்த கவுரவ டாக்டர் பட்டம் என்னவோ போகிற போக்கில் பாலாவுக்கு கொடுக்கப்பட்டுவிடவில்லை.. அவர் தொடர்ந்து மனிதாபிமானத்துடன் மேற்கொண்டு வரும் சமூக சேவை செயல்பாடுகளை எல்லாம் கடந்த ஐந்து வருடங்களாக கவனித்து, அவற்றை கணக்கில் கொண்டே, இந்த டாக்டர் பட்டத்திற்காக அவரைத் தேர்வு செய்துள்ளது ராயல் அமெரிக்கன் பல்கலைக்கழகம்.
பாலாவை பொருத்தவரை பலருக்கும் ஒரு நடிகராகத்தான் தெரியும், ஆனால் கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் பாலா, தனது நடிகர் பாலா தொண்டு நிறுவனம் மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் உதவிகளை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக இந்த கொரோனா தாக்கம் நிலவிய காலகட்டத்தில் சுமார் 250 குடும்பங்களைத் தத்தெடுத்துக்கொண்ட பாலா, அந்த குடும்பங்களின் ஒவ்வொரு தேவையையையும் பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்து வருகிறார்.
அடித்தட்டு மாணவர்களுக்கான கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளுதல், வீடு கட்டிக் கொடுத்தல், மருத்துவ உதவிகள் மற்றும் தேவைப்படுவோருக்கு மிக உயர்ந்த கட்டண செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சைகளுக்கு உதவி செய்வது என நடிகர் பாலா செய்துவரும் உதவிகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த டாக்டர் பட்டம் கிடைத்தது பற்றி நடிகர் பாலா கூறும்போது, யாருமே நூறு வயது வரை வாழப்போவது கிடையாது.. இந்த வயதில் நாலு பேருக்கு நம்மால் நல்லது பண்ண முடியும் என்பதற்கு எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக இதைக் கருதுகிறேன்.. இப்போது என் பொறுப்பு இன்னும் கூடுதலாகி இருப்பதாக நினைக்கிறேன். முன்னைவிட இன்னும் முழு வீச்சில் எனது சமூக சேவைகள் தொடரும் என்று கூறியுள்ளார்.
One more episode of Cook with Comali gets cancelled - Reason revealed!
19/01/2021 04:47 PM
Som's funny and interesting first video after Bigg Boss! Don't Miss!
19/01/2021 04:11 PM
Gabriella's emotional reunion with her friend - video goes viral | Check Out!
19/01/2021 02:26 PM