வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமடைந்தார் இயக்குனர்  பொன்ராம். 2013 ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் அந்த வருடத்தில்  அதிகம் ரசிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் - சூரி இணைந்து காமெடியில் கலக்கிய திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். 

D.இமான் இசையமைத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்  திரைப்படத்தின் பாடல்களும்  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணி ரஜினிமுருகன் சீமராஜா போன்ற திரைப்படங்களில் மீண்டும் இணைந்தது. இந்த நிலையில் இயக்குனர் பொன்ராமின்  இணை இயக்குனரும் துணை நடிகராக நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவருமான  திரு பவுன்ராஜ் இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் பல காட்சிகளில் நாம் பவுன்ராஜ் பார்த்திருப்போம். அதைப்போல் ரஜினிமுருகன் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் சூரி இணைந்து நடிக்கும் காமெடி காட்சிகளில் நிறைய இடங்களில் பவுன்ராஜ் தோன்றிய இருப்பார். குறிப்பாக சிவகார்த்திகேயனின் டீக்கடையில்  வாழைப்பழம் வாங்க வரும் பவுன்ராஜின் காமெடி இன்றும் பல மீம்ஸ் கிரேக்கர்களுக்கு நிரந்தர டெம்ப்ளேட் ஆக இருக்கிறது. 

இயக்குனர் பொன்ராமின் இணை இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான பவுன்ராஜின் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பலரும் பவுன்ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பவுன்ராஜின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.