தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் சகோதரரும் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவருமான அல்லு சிரிஷ் , தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராதாமோகனின் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான கௌரவம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

முன்னதாக தமிழில் வெளியான மாயாபஜார் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அல்லு சிரிஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் அல்லு சிரிஷ்  நடிப்பில் புதிய திரைப்படம் தயாராக உள்ளது. 

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அல்லு சிரிஷின் தந்தையான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்  அவர்களின் GA2 பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தை ஸ்ரீ திருமலா புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. நடிகர் அல்லு சிரிஷ் உடன் இணைந்து நடிகை அனு இமானுவேல் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

அல்லு சிரிஷ் மற்றும் அனு இமானுவேல் இணைந்து நடிக்கும் ரொமான்டிக் காதல் திரைப்படமாக வெளிவர உள்ள இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணியளவில் வெளியாக உள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக ரொமான்டிக்கான முதல்  ப்ரீ லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் அத்திரைப்படத்தில் மற்றொரு  ரொமான்டிக் ப்ரீ லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது. அல்லு சிரிஷின் ரசிகர்கள் நாளை வெளியாக உள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்காக  எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.