நடிகர் மம்முட்டி கதாநாயகனாக நடித்த ஆனந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி. தொடர்ந்து நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த லிங்குசாமி தொடர்ந்து அஜீத் குமாருடன் ஜி, விஷாலுடன் சண்டக்கோழி, விக்ரமுடன் பீமா, கார்த்தியின் பையா என தொடர் வெற்றிகளைக் கொடுத்தார்.

கடைசியாக நடிகர் சூர்யா நடிப்பில் உருவான அஞ்சான் மற்றும் விஷால் நடிப்பில் உருவான சண்டக்கோழி 2 ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. தொடராக ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிப்பில்  தமிழ் & தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குகிறார்.

#RAPO19 என குறிப்பிடப்படும் ராம் போத்தினேனியின் 19வது திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கிறார்.நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார். பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரிஷ்யம் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடந்து வரும் நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபல கதாநாயகனாக திகழும் நடிகர் ஆதி இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கில் ஒரு சில திரைப் படங்களில் வில்லனாக நடிகர் ஆதி நடித்துள்ள நிலையில் #RAPO19 படத்திலும் வில்லனாக நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.