டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஃபாரஸ்ட் கம்ப். 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 

உலக அளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படமாகும். இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது.

ஹிந்தியில் லால் சிங் சத்தா என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு உருவாகி வருகிறது. அமீர் கான் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கரீனா கபூர், விஜய் சேதுபதி, மோனா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர். அத்வைத் சந்தன் இயக்குகிறார். லாக்டவுனுக்கு முன் டெல்லி, ராஜஸ்தான், சண்டிகர், கேரளா, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. எல்லையில் சீன ராணுவத்தால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக லடாக்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் தொடங்கியுள்ளது. அங்கு ரசிகர்களுடன் ஆமிர் கான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. துருக்கி படப்பிடிப்பைத் தொடர்ந்து ஜார்ஜியாவிலும் படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. கிறிஸ்துமஸுக்கு வெளியாகவிருந்த இந்தப் படம் கொரோனா காரணமாக தள்ளிப்போனது. மேலும் அடுத்த ஆண்டு 2021 கிறிஸ்துமஸுக்கு வெளியாகக்கூடும் என்று கூறப்படுகிறது. பாலிவுட்டில் விஜய்சேதுபதி அடியெடுத்து வைப்பதால் அவரது நடிப்பை காண ஆவலில் உள்ளனர் திரை விரும்பிகள்.  

நடிகர் அக்‌ஷய்குமார் தனது பெல்பாட்டம் படத்தின் ஷூட்டிங்கை இங்கிலாந்தில் தொடங்கியுள்ளார். இதற்காக நடிகை ஹூமா குரேஸி உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் கிளாஸ்கோ சென்றனர். அவரைத்தொடர்ந்து நடிகர் சுதீப் தனது பாண்டம் படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கியுள்ளார். கே.ஜி.எப் சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் 15-ம் தேதி முதல் துவங்குகிறது.