நானே வருவேன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! விவரம் உள்ளே
By Anand S | Galatta | August 07, 2022 18:19 PM IST
ஆகச் சிறந்த நடிகராக பலகோடி சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து, தற்போது இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் தனுஷ் அடுத்ததாக, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வாத்தி படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வாத்தி (SIR) படத்தின் டீசர் வெளியானது.
முன்னதாக ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பட இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. தி க்ரே மேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தி க்ரே மேன் படத்தின் இரண்டாவது பாகம் விரைவில் தயாராகவுள்ளது. இப்படத்திலும் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
முன்னதாக தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.
கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தயாரிப்பில் ஹீரோ - வில்லன் என இரட்டை வேடத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் நடிகை இந்துஜா, பிரபு, யோகி பாபு, ஷெல்லி கிஷோர் ஆகியோருடன் இணைந்து இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நானே வருவேன் திரைப்படத்தின் பாடல்களின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரும், பிக் பாஸ் தமிழ் போட்டியாளருமான ஆஜீத் நானே வருவேன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தற்போது நிறைவு செய்துள்ளதாக தெரிவித்த ஆஜீத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் செல்வராகவனுடன் இயக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் இதோ…