தடகள வீரராக ஆதி நடிக்கும் திரைப்படம் கிளாப். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வருகிறது. கதாநாயகியாக ஆகன்ஷ்கா சிங் நடிக்கிறார். இப்படத்தின் வாயிலாக பிருத்வி ஆதித்யா இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த வருடம் எளிய விழாவுடன் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இறுதி கட்ட ஷூட்டிங் நாளில் எடுத்த வீடியோவை நடிகர் ஆதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு முறையான பாதுகாப்புடன் துவங்கிய இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததை கொண்டாடினர் படக்குழுவினர். மேலும் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளனர் கிளாப் குழுவினர்.  

ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிரபலமடைந்தவர் என்றாலும், முன்னணி நடிகைகளாக நடிக்கும் அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகியோரும் உடற்பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. 

மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்து அசத்தினார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் இறுதியாக மரகத நாணயம் படத்தில் நடித்திருந்தார். 

கொரோனா காரணமாக அரசு அறிவித்த லாக்டவுனில், Let's the Bridge என்ற அமைப்பின் மூலம் உதவி இயக்குனர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கி உதவினார் ஆதி. மேலும் பல உதவி இயக்குனர்களுக்கு உணவு பொருட்ககளை வழங்கி உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.