இந்திய திரை உலகின் இசை ஜாம்பவானாக விளங்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த 2022ஆம் ஆண்டில் ரசிகர்களுக்கு பெரிய விருந்து வைக்க காத்திருக்கிறார்.  தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்கள் என இந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் வெளிவர உள்ளன.

தமிழில் சீயான் விக்ரமின் கோப்ரா, சிவகார்த்திகேயனின் அயலான், சிலம்பரசன் TR-ன் பத்து தல, பார்த்திபனின் இரவின் நிழல், கௌதம் வாசுதேவ் மேனனின் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களோடு பிரம்மாண்ட படைப்பாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் இசைப்புயலின் இசை மழையில் ரசிகர்களை நனையவைக்க தயாராகி வருகின்றன.

மேலும் மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையன் குஞ்சு, ப்ரித்வி ராஜின் ஆடுஜீவிதம் ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் பாலிவுட்டில் மெய்டான், ஹீரோபன்டி, பிப்பா ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாது தனது மாஜா நிறுவனம் சார்பில் பல சுயாதீன இசை கலைஞர்களை மேடையில்  அரங்கேற்றம் செய்து வரும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கடந்த ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த என்ஜாய் என்ஜாமி பாடலை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் “மூப்பில்லா தமிழே தாயே” பாடல் அடுத்து வெளிவர உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் கவிஞர் தாமரை எழுதியுள்ள “மூப்பில்லா தமிழே தாயே” பாடல் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்தப் பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் அந்த ப்ரோமோ இதோ…