இந்திய திரை இசையை உலகறியச் செய்தவர் ஆஸ்கார் தமிழன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். தன்னுடைய திரை இசைப் பயணத்தில் 30 ஆண்டுகளை கடந்து இன்றும் தனது இசையால் ரசிகர்களின் இதயங்களை ஆட்சி செய்யும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த ஆண்டு(2022) வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் ரசிகர்களை இசை மழையில் நனைய வைக்க காத்திருக்கின்றன.

அந்த வகையில் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். முழுவீச்சில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

தொடர்ந்து இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் உலக சாதனை முயற்சியாக தயாராகியிருக்கும் இரவின் நிழல் படத்திற்கும் இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் பல வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருக்கும் கோப்ரா மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படமாக வெளிவரவுள்ள அயலான் ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜாவின் திருமணம் சில தினங்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகளின் திருமண வரவேற்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த சந்திப்பின்போது ஏ.ஆர்.ரஹ்மான், அவரது மனைவி சாயிரா பாணு, மூத்த மகள் கதீஜா ரஹ்மான்,மருமகன் ரியாசுதீன், இளைய மகள் ரஹீமா ரஹ்மான், மகன் ஏ.ஆர்.அமீன் மற்றும் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் உடனிருந்த புகைப்படம் தற்போது வெளியானது. அந்த புகைப்படம் இதோ…